Tuesday, August 27, 2013

கமோடிடியில் வெற்றிகரமாக செயல்பட...

நிறைய பயிற்சிகள் எடுத்துக்கொண்டு , ஃபண்டமெண்டல் , டெக்னிகல் அனாலிஸிஸ் பற்றி தெரிந்துகொண்டோ அல்லது புரிந்துகொண்டோ, வணிகத்தில் இறங்கியாகி விட்டது. 

இந்திய கமோடிடி மார்க்கெட் காலை 10 முதல் இரவு 11.30 அல்லது 11.55 வரை இயங்குவது நாமறிவோம். நாம் வணிகத்தில் இறங்கும் நேரம் ஒன்று வணிகம் ஆரம்ப நேரம் அல்லது நமக்கு வசதியான நேரம், நாம் இடைப்பட்ட வணிக நேரத்தில் , வணிகத்தை ஆரம்பிக்க எண்ணும் போது, என்ன செய்வோம்?

நாம் வணிகம் செய்ய விரும்பும் பொருளின் முதல் நாள் முடிவு விலை, இன்றைய ஆரம்ப விலை, இன்றைய உச்சபட்ச விலை, இன்றைய கீழ்நிலை விலை, இவற்றைப்பார்ப்போமா , இல்லையா? 

சரி. வேறு என்ன பார்ப்போம்?

இன்றைய யு எஸ் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கிறது , எனப்பார்ப்போம் அல்லவா? மேலும், நாம் வணிகம் செய்ய தேர்வு செய்த பொருளுக்கு, உலகலாவிய சந்தையில் அதன் தேவைப்பாடு என்ன, அதன் மொத்த இருப்பு, இப்போது அதன் ஆர்டர் தேவை அளவு என்ன? மேலும் இன்றைக்கு என்ன என்ன யு எஸ் வாராந்திர பொருளாதார அறிக்கைகள் வர இருக்கின்றன, என பார்ப்போமா, இல்லையா?

சரி, இவற்றை எல்லாம், நம்முடைய அளவில் நாம் அவதானித்துவிட்டோம், பிறகு என்ன ? வணிகத்தில் இறங்க வேண்டியது தானே? என்ன யோசனை ?

எல்லாம் ஓரளவு நாம் யூகித்தாலும், இடைநிலை அதாவது , நாம் இப்போது வணிகத்தில் இறங்க எண்ணும் நேரத்தில் , அந்த பொருளின் வணிக நிலையை கவனிக்கும்போது, ஒரு சிறிய யோசனை வருகிறதே, நம்முடைய முடிவு அப்பொருளை வாங்குவதா அல்லது விற்பதா எதை செய்வது என்று?

இந்த ஒரு விசயத்தைத்தான் , நாம் இப்போது பார்க்கப்போகிறோம், அதற்காகத்தான் இந்த சற்றே நீளமான ஒரு முன்னோட்டம்.

சரி , எப்படி வணிக இடைநேரத்தில் வணிகத்தை ஆரம்பிப்பது?

நம்மில் நிறைய பேருக்கு இப்போது ஆற்றில் குளிக்கும் வாய்ப்பு இல்லாவிடினும், பள்ளிபருவத்தில் அல்லது கல்லூரிப்பருவத்தில் இருந்திருக்கும், அந்த முதல் குளியல் அல்லது நீச்சல் அனுபவத்தை சற்றே எண்ணிப்பாருங்கள், யாராவது ஒரு நண்பர் நிச்சயம் அவருக்கு நீச்சல் தெரிந்திருக்கும் [ :) ], அவர்தான் நமக்கு தைரியம் சொல்லி, நமக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பார்,அவருக்குத்தெரிந்த அல்லது அவர் அறிந்த நீச்சல் தொடர்பான சில விசயங்களை உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பார், அதில், அவர் சொல்லிக்கொடுத்ததில் தலையாயது என்ன என்று இப்போது யோசிக்க முடிகிறதா? யோசியுங்கள், கொஞ்ச நேரம்!

என்ன ஞாபகம் வரவில்லையா? எதிர்நீச்சல் பற்றி உங்கள் நீச்சல் பயிற்சிக்காலங்களில் நண்பர் என்ன சொன்னார்? அல்லது சொல்லியிருப்பார்?
ஆரம்ப காலம் அல்லது எப்போதும், எதிர்நீச்சல் மிக மிக கவனமான அல்லது ஆபத்துக்காலங்களில் மட்டும் செய்ய வேண்டிய ஒன்று என ச்சொன்னாரா, இல்லையா?  இப்போது ஞாபகம் வந்துவிட்டதா? நல்லது, அதுதான் இங்கே நமக்கும் அவசியம் தேவைப்படும், என்றும் மனதில் பசுமையாக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டிய ஒன்று!

ஏன் என்கிறீர்களா? எல்லாம் நமது கமோடிடி வணிகம் செவ்வனே செய்யத்தான்!

எப்படி ஆற்றில் நீர் வரத்திற்கு எதிராக நீந்தக்கூடாதோ, அப்படிதான் கமோடிடி மார்க்கெட் போக்கிற்கு எதிராக அப்போது செயல்படக்கூடாது!

நீங்கள் பல்வேறு தகவல்களை திரட்டிக்கொண்டு, ஒரு முடிவு எடுத்து வணிகம் செய்ய வரும்போது, இங்கே மார்க்கெட் கூலாக, உங்கள் எண்ணத்திற்கு நேர்மாறாக சென்றுகொண்டிருக்கும், ஏன் எப்படி என யோசிக்காமல் ,உங்கள் முடிவுப்படி எதிர்நீச்சல் போட்டு கண் முன்னே கிடைக்கும் கமோடிடி வணிக இலாப வாய்ப்பினை இழந்து நஷ்டமடைவீர்களா? அல்லது மார்க்கெட் போக்கில் சென்று இலாபம் அடைவீர்களா?

முடிவு உங்கள் கையில்! 

சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! வெல்லுங்கள்!!