Saturday, February 28, 2015

கமோடிடியில் ஜெயிக்க, New !

வணிக நேரம்

வணக்கம் அன்பர்களே! 


                                              நீண்டகாலம் கழித்து உங்களை சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சியடைகிற வேளையில், நீண்டகாலம் உங்களை சந்திக்க இயலாமல் இருந்ததற்கு வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறேன்.

         காலம் தான் வாழ்க்கையில் நிறைய பாடங்களை கற்றுத்தருகிறது! காலம் நம் நம்பிக்கைக்கும், காத்திருப்புக்கும் தரும் மிகச்சிறந்த பரிசாக பொறுமையையும், நிதானத்தையும்  கொள்ளலாம்.

     நம்முடைய ஆரம்பப் பதிவுகளை வாசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில், இந்தப்பதிவை துவங்குகிறேன்.

நாம் ஏன் பொறுமையைக்கடைபிடிக்க வேண்டும்? வணிகத்தில் பொறுமை மிக உயரிய தத்துவமாயிற்றே, அதனால்! 
 எப்படி.,?  பார்ப்போம்!

வணிகத்தில் ஈடுபடும் முன்னர் நாம் மனதில் கொள்ள வேண்டிய விசயங்களை மறுபடியும் ஒரு முறை நினைவில் கொள்வோம்!

1. எந்தப்  பொருளில் வணிகம் செய்யப்போகிறோம்?

2. அந்தப்பொருளின் அன்றைய சந்தை மதிப்பீடுகள் என்னென்ன?

3. டாலர் இந்திய கரன்சி மதிப்பீடு மற்றும் காரணிகள்.

4.சந்தையின் போக்கை நிர்ணயிக்கக்கூடிய புறக்காரணிகள் ஏதேனும் அன்றைய தினத்தில் உள்ளதா?

5.சந்தையில் நாம் வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன் , நாம் மனதில் ஓரளவு யூகித்து வைத்திருந்த மேற்சொன்ன விசயங்கள், எந்த அளவுக்கு பொருளின் விலைப்போக்கை நிர்ணயித்தது என அறிந்துகொள்ளுங்கள்.

6. வணிக நேரம்.

 நாம் மேற்சொன்னபடி, நீங்கள் எல்லாத் தகவல்களையும் மனதிற்குள் சேமித்து இருத்திக்கொண்டு, வணிகத்தில் ஈடுபட்டாலும் , அவ்வணிகம் நிச்சயம் தவறாக அமைய வாய்ப்புகள் மிக அதிகம் உண்டு!
என்ன பயமுறுத்துகிறீர்கள்., என வருந்தவேண்டாம் நண்பர்களே!
யோசித்துப்பாருங்கள், நீங்களே உணர்வீர்கள்.

நம்முடைய வணிக முறைகள் , பெரும்பாலும் நம்மைச்சார்ந்தே இருக்கின்றன, நம்முடைய அலுவல் , மற்ற வேலைகள் , நமது பொருளாதார  தேவைகள் , இன்று இத்தனை ரூபாய் ஈட்ட வேண்டும் என நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சட்ட திட்டங்கள். எப்படி எல்லாம் நம்மைச்சார்ந்தே நமது நலனைச்சார்ந்தே, இருக்கின்றன. இருக்கட்டும் , தவறில்லை.

வீடு வளர நாடு வளரும், சீர்திருத்தங்களையும்,சமூக நலங்களையும்  முதலில் வீட்டில் இருந்து ஆரம்பியுங்கள் என அறைகூவல் விடுக்கவில்லையா புரட்சிக்கவி பாரதிதாசன் ?
அல்லது
பல   நூற்றாண்டு முன்னர் சங்ககால தமிழ்ப்பாட்டி அவ்வை , குடி உயர கோன் உயரும் , மக்கள் உயர, அரசு உயரும் என உணர்த்தவில்லையா?

       இப்படி முன்னேற்ற சிந்தனைகளை நம்மில்  , நம் எண்ணத்தில் உரமாக வைத்துக்கொண்டு , நாம் பொருளாதார தன்னிறைவு அடைய , நாம் தன்னிலை அடைந்துவிட்டால் குறைந்தபட்சம் அரசிடம் மானியம் கேட்காமல் இருப்பதே, நாட்டிற்கு நம்மால் ஆன சேவையாயிற்றே!  

       நம்முடைய தேவைகளுக்கு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட சமூகத்தில் உள்ள அனைவரிடமும் எதிர்பார்க்காமல், நம் முயற்சியில் சம்பாதித்து சமூகத்தில் நம்மைப்பற்றிய நல்ல எண்ணங்களை வளர்க்கலாமே!  என்ற உயரிய குறிக்கோளுடன் இத்தகைய மதியூகமிக்க வணிகங்களில் ஈடுபட்டால் நிச்சயம் வெற்றிதான்.

         இருக்கட்டும்,   இப்போது ஏன் நாம் மேற்சொன்ன பொருட்களின் சந்தை விலையை நிர்ணயிக்கும் காரணிகளை அறிந்தும் வெல்லமுடியவில்லை, அடிக்கடி ஆகும் ஸ்டாப் லாஸ்களால் மனம் வெறுத்து பயம் வருகிறதே, மூலதனம் மிக அதிகமாகக் குறைகிறதே, எனக்  கலங்கியே நாம் பெரும்பாலும் தோற்கிறோம்!

   என்ன காரணம் அறிந்தீர்களா  நண்பர்களே?!  சொல்லுங்கள் , என்னையே சொல்லச்சொல்கிறீர்களா? , சரி,
 ஏன்? என்ன காரணம்?  எனப்  பார்ப்போம் வாருங்கள்.

     நாம் வணிகத்தில் ஈடுபட அன்றைய  நாளில் கிடைத்த நேரத்தில் வணிகத்தில் ஈடுபடுகிறோம், சந்தைப்போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்  எல்லாம் பார்த்துவிட்டோம், 
ஒன்றை மட்டும் , நம் வசதிக்காக,  மறந்துபோணோமே! 

நம்முடைய கணிப்பின்படி வணிகம் எதிர்பார்த்த இலாபம் தராவிட்டாலும் குறைந்தபட்சம் புரோக்கரேஜ் அளவிற்கேனும் இலாபம் வரவேண்டும், ஏன் மாறியது? நாம் நம்மைப்பிரதானப்படுத்தினோம், வணிகத்தை சற்றே அலட்சியம் செய்து , எனக்கு தான் தெரியுமே, இன்று பொருளின்  விலை இத்தகைய காரணிகளால் நிச்சயம் கூடும் என்று,  என அதீத தன்னம்பிக்கையால் தோற்றுப்போணோம்! மன்னிக்கவும்! உண்மையா இல்லையா?

    இத்தகைய தன்முனைப்பு காட்டும் வணிகர்களின் வணிகம் தோற்கக்காரணம், அவருக்கு நேரம் இருக்கிறது, வணிகம்  தொடங்கிவிட்டார்,எனவே அவர் கணித்தபடி வணிகம் நடக்கவேண்டும், அவர் வணிகத்தில் ஈடுபடும் நேரம் விரைவில் முடிய வேண்டும், என்ற எண்ணத்தில் தான் மேற்சொன்னவை நடந்தன. 

வணிகத்தில் மிக மிக முக்கிய விசயங்களில் ஒன்றாக, 
பன்னாட்டு வணிக நேரத்தை
கவனிக்க வேண்டுமா , வேண்டாமா?

அத்தகைய நேரங்களில் நம் கணிப்பு 100க்கு100 பொய்க்கக்கூடிய வாய்ப்புகள் உண்டா இல்லையா?

அத்தகைய நேரங்களில், அமைதியாக மார்க்கெட் போக்கை கவனித்து அதன் பின்னர் வாய்ப்புகளுக்கேற்ப , வணிகத்தில் ஈடுபட வேண்டும் அல்லவா?

    மேலும்,  கிடைத்த நேரம் குறைவு , எனவே அத்தனை நேரம் காத்திருக்க முடியாது , சேகரித்த தகவல்களின் அடிப்படையில் வணிகம் செய்கிறேன் என்றால், யார் என்ன செய்யமுடியும்?  அவரவர் வாழ்வு அவரவர் கையில்!

  அவசியம் மனதில் கொள்ள வேண்டியவை!

நேரம் கிடைக்கிறதே, என வணிகத்தில் ஈடுபடவேண்டாம்!
பல அலுவல்களுக்கிடையில் , வணிகம் செய்யவேண்டாம்!
தினமும் வணிகம் செய்ய முயலவேண்டாம்!

          நாம் சேகரித்தத் தகவல்களின் அடிப்படையில் , வணிகம் செய்ய எண்ணும்போது, அவசியம் கவனிக்க வேண்டியது, அந்த நேரத்தில் , சந்தைப்போக்கை மாற்றக்கூடிய ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் ஆரம்பமாகும் நேரமா, என்பதைத்தான்.

     பல்வேறு காரணிகள் மூலம் ஒரு பொருளின் அன்றைய விலையை அறிந்து வாங்கவோ அல்லது விற்கவோ முடிவு செய்யும்போது, மேற்சொன்ன சந்தைகள் ஆரம்பமாகும் நேரம் எனில் , சந்தை நிச்சயம் நாம் எதிர்பார்த்த நிலையில் இருக்காது, எத்தகைய வணிகமும் அந்த நேரத்தில் நிச்சயம் ஸ்டாப்லாஸ் ஆகும். ஏனெனில், கமோடிடி சந்தை உலகளாவிய சந்தை, நாம் அறிந்திராத வேறு சில காரணிகளாலும் சந்தையில்  மாற்றங்கள் இருக்கக்கூடும் அல்லது நாம் மதிப்பிட்ட வகையிலேகூட பொருளின் விலை அமையலாம் ஆயினும், அதற்குமுன் சந்தை, பொருளின் அன்றைய உச்சத்தையோ அல்லது  அன்றைய குறைந்த நிலையையோ நோக்கி வெகுவேகமாக ஊசலாடும், இந்த நிலையே அதிகநேரம் நீடிக்கும்,  நமது கவனம் சிதறும், 
விளைவு? அறிந்ததே!

"நேரமறிந்து" வணிகம் செய்வீர் ! 
"நேரமிருக்கிறதே" என எண்ணி வணிகம் செய்யாதீர் !


மீண்டும் சந்திப்போம் அன்பர்களே!

ஞானா.