வணிக நேரம்!
கமோடிடி வணிகம் பகுதியில் நாம் தொடர்பு கொண்டு நீண்ட நாட்களாகிவிட்டன. மன்னிக்க வேண்டும், சில தனிப்பட்ட அலுவல்களால் இந்த, இடைவெளி இங்கே உண்டாகிவிட்டது.
இன்று நாம் பார்க்க இருக்கும் ஒரு விஷயம், சிலருக்கு அது சாதாரண விசயமாகத்தெரியலாம், சிலருக்கு அது பெரிய விசயமாகத்தெரியலாம், எப்படியாயினும், விஷயத்தை தெரிந்துகொண்டு பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்!
என்ன அந்த விஷயம் என்கிறீர்களா?, அதுதான் தலைப்பிலே இருக்கிறதே ஆம், வணிக நேரம் தான் அந்த விஷயம்.
நம்மில் பலருக்கு தினமும் டிரேட் செய்ய விருப்பம் இருக்கும் ஆயினும் நேரம் இருக்காது, எனவே கிடைக்கும் நேரத்தில் வணிகம் செய்வோம் எனப்பலர் என்ன செய்வர் தெரியுமா, தங்களுக்கு ஓய்வான நேரத்தில் டிரேட் செய்வர். அவசர அவசரமாக, அன்றைய மார்க்கெட் வணிகத் தகவல்களை சற்று அலசிவிட்டு முடிவு செய்த பொருளை வாங்கவோ அல்லது விற்கவோ ஆர்டர் செய்வர்.
ஏன் என்றால் , அவர்களுக்கு கிடைத்த இந்த அரை மணியோ அல்லது அதற்கும் குறைந்த நேரத்திலோ இந்த வணிகத்தை நிறைவு செய்ய வேண்டும், எனவே இந்த அவசரம். விளைவு என்னவாகும் ?
சற்றே பார்ப்போமா, அவர்கள் தேர்வு செய்த நேரம், உலக வணிக சந்தையில் அல்லது இந்திய சந்தையில் மாற்றங்கள் அவ்வளவு இல்லாத ஒரு நேரம், மேலும், பொருட்களின் விலை இந்த நேரத்தில் ஒரு சீரான நிலையில் இருக்காது, வோலட்டைல் [Volatile] எனப்படும் குறைவான விலை மாற்றத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் நேரம் அது.
அந்த நேரத்தில் ஈடுபட்ட வணிகம் என்னவாகும், மேலும் கீழும் குறைந்த விலை வித்தியாசத்தில் உள்ள அந்தப்பொருள் , அவர் குறித்த விலை அருகே வராது நிற்கும், நேரம் ஆகிக்கொண்டிருக்கும், நண்பர் என்ன செய்வார், இனி நேரமில்லை எனவே வணிகத்தை நிறைவு செய்வோம் என உடனே வணிகத்தை முடிப்பார், விளைவு? புரோக்கரேஜ்க்குக்கூட இலாபம் வராமல் , நட்டத்தில் அந்த அவசர வணிகம் முடிவு பெறும் !
எதற்கு இந்த அவசரம், வேகம்? தினமும் வணிகம் செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோமா? இல்லை தினமும் வணிகம் செய்தால்தான் நமக்கு சாப்பாடு என யாராவது உத்தரவிட்டு உள்ளனரா? இல்லையே! பின் எதற்கு இந்த அவசரம்?
அனாவசியமான நட்டம் மற்றும் தேவையில்லாத பதட்டம்.
வணிகம் தின வணிகம் அல்லது வேறு வகையாயினும் அடிப்படை ஒன்று தான் , வணிகத்தில் நாம் ஈடுபடும் நேரம் தான் அது, ஒன்று ஐரோப்பிய சந்தைகள் திறந்த நேரம் அல்லது அமெரிக்க சந்தைகள் திறந்த நேரம் மேலும் அன்றைய சந்தைபோக்கு காரணிகள் குறித்த தகவல்கள் முறையே அறிந்து அதன் பிறகு, நாம் வணிகம் செய்ய முடிவு செய்த பொருளில் எவ்வளவு இலாபம் வேண்டுமோ அந்த அளவில் ஒரு அளவு அவசியம் ஸ்டாப் லாஸ் வைத்து வணிகத்தில் ஈடுபடவேண்டும்!
நமக்கு நேரம் இல்லையெனில், பிறகு ஒரு நாள் பார்த்துக்கொள்ளலாம், கிடைக்கும் நேரத்தில் வணிகம் செய்ய, கமோடிட்டி மார்க்கெட் என்ன பெட்டிக்கடையா, நேரம் கிடைக்கும் போது , கடையைத்திறந்து வியாபாரம் செய்ய! அதுவும் சொந்தக்கடை என்றாலாவது விற்பனை ஆகாவிடினும் நட்டமில்லை, பொருள் அப்படியே இருக்கும், ஆயினும் கமோடிட்டி மார்க்கெட்? அப்படியா? கொஞ்சம் அசந்தாலும் , நம்முடைய மூலதனத்தை பெருமளவு இழக்கச்செய்து விடும்!
எனவே, நண்பர்களே!, நீங்கள் செய்யும் தின வணிகம் என்பது , உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது செய்வது அல்ல, சந்தைகளின் வணிக நேரம் பார்த்து செய்வதாகும்! என நீங்கள் அறிவீர்கள்தானே!
நன்றி!
அடுத்த பதிவில் சந்திப்போம்!
- அடுத்தப் பதிவிலும் வணிக நேரம்
தொடரும்...!